வடக்கு மண்டலத்தை சேர்ந்த தி.மு.க. மாணவரணி அமைப் பாளர்களுக்கு திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் மூன்று நாள் பயிற்சி கருத் தரங்கை நடத்தி முடித்துள்ள தி.மு.க. மாணவரணி மாநில செயலாளர் சி.வி.பி.எம்.எழிலர சன் எம்.எல்.ஏ.வுடன் நக்கீர னுக்காக பிரத்யேக சந்திப்பு.
மாணவரணி நிர்வாகிகளுக்கு பயிற்சிப் பாசறை நடத்துவதன் நோக்கம்?
திராவிட இயக்க சிந்தனை, வரலாறு, கொள்கை, கோட்பாடு, திராவிட இயக்கத் தலைவர்களின் வரலாறு, ஆட்சிக்கு வந்தபின் கொண்டுவந்த சட்டங்கள், அதனால் சமூகத்தில் உருவான மாற்றங்கள் குறித்து அடுத்த தலைமுறைக்கு கொண்டுசென்று சேர்க்கவேண்டியவர்கள் எங்கள் மாணவரணியினர். அதனால் கருத்தியல் ரீதியாக மாணவரணியை வலிமைப்படுத்த பயிற்சிப் பாசறைக் கூட்டங்களை நடத்துகிறோம்.
நீட் தேர்வை ரத்து செய்ய 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்வை நடத்திக்கொண்டிருக்கிறீர்கள். இதன்மீது நட வடிக்கை எடுப்பார்கள் என நினைக்கிறீர்களா?
அரசியலமைப்புச்சட்டம் வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையில் மக்கள் வாக்களித்து உருவாக்கிய அரசாங்கம் கொண்டுவந்த சட்ட மசோதாவை ஆளுநர் பல மாதங்கள் கிடப்பில் வைத்திருந்து திருப்பி அனுப்பியதை, மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிவைத்தோம். அதற்கு குடியரசு தலைவரின் ஒப்புதல்தான் வேண்டும். இதில் அரசியல் கிடையாது. தமிழ்நாட்டு கல்வி முறையில் ஒன்றிய அரசு தலையிடுவதை மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதை பா.ஜ.க.வுக்கு உணர்த்தவேண்டும் என்பதற்காகவே இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டு கல்லூரிகளில் இப்போது வலதுசாரி மாணவர் அமைப்புகளும் உருவாகிறது. சமூகநீதி பேசும் மாணவ அமைப்புகள் பலவீனமாகிவிட்டதா?
தி.மு.க.வின் சித்தாந்தங்கள், சிந்தனைகள் மீது மாணவர், இளைஞர் சமுதாயத்திடமும் பெரிய ஈர்ப்பு உள்ளது. அரசியலில் புதியவர்கள் வருவதும், புதிய சிந்தனைகள் வருவதும் அதனை நோக்கி சிலர் செல்வதையும் நாம் விமர்சிக்கக்கூடாது. இன்னொரு சிந்தனைக்கு நீ போகக்கூடாது என்பது ஜனநாயகமல்ல, அது பாசிஸம். அவர்களின் சிந்தனையை ஏற்றுக்கொண்டவர்கள் எவ்வளவு இருக்கிறார்கள்? திராவிட சிந்தனையை ஏற்றுக் கொண்டவர்கள் எவ்வளவு சதவிதம் இருக்கிறார் கள் என்பதைத்தான் நாம் கருத்தில்கொள்ள வேண்டும். ஒன்றிய அரசின் கீழுள்ள பல்கலை கழகங்களுக்கு கவர்னர் வழியாக வலதுசாரி சிந்தனை கொண்ட அமைப்புகளை உருவாக்கச் சொல்கிறார்கள். வலதுசாரிகளை வைத்து நிகழ்ச்சிகளை நடத்தச்சொல்லி நெருக்கடி தருகிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, வலதுசாரி சிந்தனைகள், செயல்பாடுகளை மக்கள், மாணவர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
இந்தித் திணிப்புப் போராட்டத்தில் மாணவர்கள் எழுச்சியுடன் கலந்துகொண்டு, ஆட்சியாளர்களை அப்புறப்படுத்தி தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. நீட் தேர்வுக்கு எதிராக மாணவர் எழுச்சி என்பது குறைவாக இருப்பதன் காரணமென்ன?
அனிதா மரணித்தபோது மக்களிடம் பெரும் போராட்டங்கள் தொடங்கியது. இப்போதுவரை கல்லூரிகள் ஒவ்வென்றின் நுழைவாயிலிலும் போராட்டங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து, இந்தி, சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்து போராட்டங்கள் நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியை தூக்கி எறிவோமென மாணவர்கள் நினைக்கிறார்கள். இது நடக்கும்.
கோவில் திருவிழா, பொது நிகழ்ச்சிகளில் மாணவர்கள், இளைஞர்களைப் பங்குபெற வைத்து இந்துத்துவா அமைப்புகள் அவர்களை வளைக்கிறது. பகுத்தறிவு, சமூகநீதி இயக்கமான தி.மு.க. இதனை எப்படி எதிர்கொள்ளவுள்ளது?
மாணவர்களை கோவில் திருவிழாவிற்கு வா என அழைப்பதன் நோக்கம், மாணவர்கள் படிக்கக்கூடாது என்பதற்காகத்தான். எனக்குத் தெரிந்து மாணவர்களும், இளைஞர்களும் பெரும்பாலும் அவர்களின் சூழ்ச்சி வலையில் விழுவதில்லை. கல்வியே நம்மை மேம்படுத்தும் என நினைக்கிறார்கள்.
கல்லூரி மாணவர்கள் மத்தியிலுள்ள சாதித் தாக்கத்தைத் தடுக்க தி.மு.க. மாணவரணி என்ன திட்டங்கள் வைத்துள்ளது?
"பாசிச, மத வெறியோடு செயல்படும் பா.ஜ.க. போன்ற கட்சிகள் மற்றும் அமைப்புகளே கல்லூரி மாணவர்களிடையே சாதித்தாக்கம் உருவாகக் காரணம். தமிழர்களிடம் சாதி கிடையாது, இது ஒரு இனமாக இருந்தது. தமிழ்நாட்டின் வரலாறு, தமிழ்மொழியின் சிறப்புகள், தமிழர்களின் தொன்மைகள் மீது ஆர்வம் உள்ளவர்களுக்காக தமிழ்நாடு மாணவர் மன்றம் என்கிற அமைப்பினை எங்கள் தலைவர் உருவாக்கியுள்ளார். இது ஒவ்வொரு கல்லூரிக்குள்ளும் உருவாக்கப்பட வுள்ளது. இது கல்லூரிக்குள் சாதி, மதமற்ற தோழமையை உருவாக்கும்.
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், மாணவரணிக்கு நிர்வாகிகளாக உருவாகிறார் களா?
"கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளிகளில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்துகிறோம். விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கிறார். இதில் சிறப்பானவர்கள் மாணவரணிக்கு அவர்களாகவே வருகிறார்கள்.
தி.மு.க.வில் 23 அணிகள் உள்ளன. மாணவரணியின் முக்கிய செயல்பாடுகளாக எதை நினைக்கிறீர்கள்?
நீட் தேர்வு, தேசிய கல்விக்கொள்கை திணிப்பு, ஒன்றரை ஆண்டுகளாக 1.5 லட்சம் மாணவர் களுக்கு பட்டங்கள் வழங்காத கவர்னர் எனப் பலவற்றைக் கண்டித்தும் போராட்டங்கள் நடத்தினோம். மாணவர் கூட்டமைப்பு உருவாக்கி, தேசிய அளவிலான தலைவர்களை அழைத்துவந்து போராட்டம் நடத்தியுள்ளோம். இளைஞரணி யோடு இணைந்து இப்போது நீட் எதிர்ப்பு கையெழுத்து பெறுகிறோம். எல்லாவற்றையும் கவனித்து தலைவர் எங்களை பாராட்டுகிறார்.
படம்: எம்.ஆர்.விவேகானந்தன்